கவிதைகள்

மன்னிப்பு என்பது...

மன்னிப்பு கேட்கும்படி
அப்புவுக்கு நான் கற்பித்த நாளில்
மன்னிப்பு என்றால்
என்னவென்று கேட்கிறான்
ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா
மன்னிப்பு என்பது
ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும்
அதிகபட்ச தண்டனையென்று
அது வலிமையுள்ளவர்கள்
வலிமையற்றவர்கள்மேல் செலுத்தும்
அதிகாரம் என்று
வலிமையற்றவர்கள்
தமது இயலாமைக்குத்
தாமே வழங்கிக் கொள்ளும்
சமாதானமென்று
கடவுள்களின் ஓய்வு நேரப்
பொழுது போக்கு என்று
பந்தயத்தில் தோற்ற குதிரையை
உயிரோடுவிடுவது என்று
மரண தண்டனைக் குற்றவாளிக்குத்
தூக்கு மேடையில் வழங்கப்படும்
கருணை என்று
ஒரு முடிவற்ற துன்பத்திற்கு
நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்வது என்று
எளிய தேவைகளுக்காக செய்துகொள்ளும்
சமூக உடன்படிக்கை என்று
கன்னத்தில் அறைந்தவர்களுக்கு
மறுகன்னத்தைக் காட்டுவது என்று
படுக்கையறையில்
மண்டியிடுதல் என்று
ஒரு இந்தியன் கண்டுபிடித்த
வினோத தத்துவம் என்று
பிரார்த்தனைகளின்
மையப் பொருள் என்று
ஒரு புரட்சியாளனால்
உதாசீனப்படுத்தப்படுவது என்று
இன்னொரு சந்தர்ப்பம்
அளிக்கும் முயற்சி என்று
இன்னொரு பக்கத்தைப்
புரிந்துகொள்வது என்று
தண்டனையை
ஒத்தி வைப்பது என்று
நண்பர்களுக்குத் தரும்
சிறந்த பரிசு என்று
ஒரு துரோகத்தை
அறியாததுபோல் நடிப்பது என்று
எந்தத் தவறும் செய்யாத போதும்கூட
கேட்கப்படுவது என்று
பெரும்பாலான சமயங்களில்
மறுக்கப்படுவது என்று
ஒருவரை அச்சத்திலிருந்து
விடுவிப்பது என்று
ஒருவரை நிரந்தரமாக
அடிமைப்படுத்துவது என்று
மறதியின்
இன்னொரு பெயர் என்று
அடிக்கடி பயன்படுத்தப்படும்
ஒரு அர்த்தமற்ற சொல் என்று
மிகவும் எளிய
ஒரு தந்திரமென்று
ஒரு போதைப்பொருள்
என்று
மன்னிக்கவே முடியாத ஒன்றை
மன்னிப்பது போல் பாவனை செய்வது என்று
ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா
மன்னிப்பு என்பது
இறுதியில்
ஒரு கண்ணீ ர்த்துளி
மட்டுமே என்று!

 

வேலைக்காரி

உயர் தர ஜாதி நாயை
சங்கிலி பிடித்து
தெருவோரம் அழைத்து சென்று
கழிவுகள் கழித்ததும் வீடு கொண்டு
வந்து சேர்க்கும் பணக்கார வீட்டு
வேலைக்காரியின் பிள்ளை கிடக்கிறது
சிறுநீரில் நனைந்தபடி
துடைத்து விட ஆளில்லாமல்....

 

காதல் வந்தாலே

பாதங்கள் தரையினை தொட மறுக்கும்
உடல் பயிற்சிகள் இல்லாமல் எடை இழக்கும்
புவி ஈர்ப்பு விதிகளெலாம் பொய்யாகும்
துலா தட்டில் மனதினை காகிதம் வெல்லும்
ஒரு பருக்கில் வயிறு நிறையும்
விண்ணைப் பார்த்தே இரவு வீணாகும்
யாவும் நடக்கும்
அழகிய காதல் வந்தாலே

 

காதலியின் தேவை

என் மவுனங்களையும் எண்ணங்களையும்
சொல்லில் வராத வார்த்தைகளையும்
கண்களின் மொழியில் புரிந்து
கொள்ளும் இதயம் தேவை.....

ஏதேதோ எண்ணங்களில் புரண்டாலும்
கண்ணுறங்கும் வேளையில்
என்னுருவம் இமைகளில் பொருத்தி
உறங்கும் இதயம் தேவை....

என் கண்ணோரம் துளிர்க்கும்
சிறுதுளி கண்­ணீரையும்
உணர்ந்து கலங்கி தவிக்கும்
அன்பு இதயம் தேவை....

மொத்தத்தில் என்னையும் நேசிக்கும்
இதயம் தேவையில்லை
என்னை மட்டுமே நேசிக்கும்
காதல் இதயம் தேவை.....