தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003).இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.
தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
- சங்க காலம் (கிமு 300 - கிபி 300)
- கழகம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
- பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
- மையக் காலம் (கிபி 1200 - கிபி 1800)
- இக்காலம் (கிபி 1800 - இன்று வரை)
பக்தி இலக்கிய காலத்திலும், மையக் காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி.பி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.
தமிழ்ப் பற்று
மொழியே உயிர், முதலாவது.
முடிவாவது அதுவே.
முடியாது-
அதை விடவா
சமர் முரசே அறை தமிழா
விழியே மொழி
ஒரு போதிலும்
மிதிகாலிடல் சகியோம்
- முருகையன்
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்
- சச்சிதானந்தம்
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய், விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மைகெட்டு
நாமமது தமிழெரென கொண்டு டிங்கு வாழ்ந்திடல் நன்றோ- சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.
- பாரதியார்
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்
- பாரதிதாசன்
சீரிளமைச் செம்மொழியேயென் காதலியே
சகமெங்கணு முனைப்போ லொருத்தி
பேரழகாய் உள்ளாளோ இலவேயிலை
பல்லழகும் உனில்கண்டேன் நீவாழியவே!
- கலைமகன் பைரூஸ்
எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் அதைப் பிறர்மேல் விட மாட்டேன்
- ஞானக்கூத்தன்
நினைத்திடும் மனத்தே நிற்பதும் தமிழே
நீளுநம் மூச்சிலும் தமிழே
முனைத்தபோர் முனையின் முன்னணி மறவர்
முகத்தொளிர் வீரமும் தமிழே
- கலைவாணன்